Monday, December 23, 2013

பால்யத்தின் மார்கழி மாதம் !!

வாழ்க்கையின் ஓட்டத்தில் நான் எங்கு ,எங்கு ஓடிக்கொண்டு இருந்தாலும் மார்கழி மாதம் என்று கேட்டுவிட்டால் , மனதின் ஓரம் சில்லேன்று நினைவுகள் வந்து தாலாட்டும்,என் கிராமம் இன்னும் ஈர பசையாய் ,என் மனதில் படிந்து இருபதற்கு இதுவும் அழகிய காரணம் .

என்னை பொருத்தவரை மார்கழிமாத ஒரே பிரச்சனை குளிர்தான் , மற்றபடி அந்த மதங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானதாய் இருந்து இருகின்றது , மார்கழி மாதம் தொடங்கிவிட்டதை எனக்கு வருட ,வருடங்கள் ,விடியற்காலையில் எங்கள் ஊர் கோயிலில் சாமி பாடல்கள் போடுவார்கள்,
4 -மணிக்கே ஒலிபெருக்கி  பாட துவங்கிவிடும் , தூக்க கலக்கத்தில் முதலில் கேட்டுவிட்டு பின்பு காலையில் வீட்டில் பேசும்பொழுது மார்கழி மாதம் வந்துவிட்டதை தெரிந்து கொள்வேன்.

எங்கள் ஊர் கோயிலின் ஒலிபெருக்கியை அந்த ஒரு மாதம் முழுவதும் என் அப்பாதான் செலவு செய்து கட்டுவார், அந்த ஒரே உரிமையை பயன்படுத்தி ரேடியோகாரரிடம் நட்பை பெற்று , சாயந்தர நேரங்களில் நண்பர்களுடன் கோவிலுக்கு சென்று எங்களுக்கு பிடித்த பாட்டை போடவோம் , எந்த பெருசுக்காவது ஒலிச்சித்திரம் தேவைபட்டால் நாங்கள் உதவி செய்து , பெருசுகளிடம் தென்னாவாட்டாய் நடந்து கொள்வோம் !

மார்கழி மாதம் தொடங்கி ஒரு வாரத்திற்கு , கோளங்களின் போட்டி ஆரம்பிக்காது , மெல்ல ,மெல்ல ஒரு ,ஒரு வீடாக கோலங்களில் யார் சிறந்தவர்கள் என்ற போட்டி சூடு பிடிக்கும், எனக்கு தெரிந்து என் அக்காவிடம் சண்டை போடாமல் சமாதானமாக செல்வது இந்த ஒரு விஷயங்களில் மட்டும்தான் , கோலம் போடுவது பெண்களின் வேலை என்பதால் ,எங்கே என்னை சேர்த்து கொள்ளாமல் போய்விடுமோ என்கின்ற பயம் !!

இந்த ஒரு மாதம் முழுவதும் , கிராமத்தின் வீதிகளில் கோலமாவு வண்டிகாரர்கள் வந்து கொண்டே இருப்பார்கள் ! கோலமாவு...கோலமாவு..கலர் கோலமாவு ..என்று அழகிய சுருதியில் ..கூவி கூவி விற்பார்கள், பணம் மட்டும்மே கொடுத்து வாங்க மாட்டார்கள் , துருபிடித்த இரும்பு சாமான்கள் , பழய அலுமினிய பாத்திரங்கள் ,புளியம் கொட்டைகள் , அதற்க்கு தகுந்ததுபோல் கோலமாவு கொடுப்பார்கள்.

நான் எந்த தெருவில் கலர் கோலமாவு விற்றாலும் ,.கோலமாவுகாரை கூபிட்டு கொண்டு விட்டுக்கு வந்து விடுவேன் , நானும் , என் அக்காவும் சேர்ந்து எங்களுக்கு பிடித்த எல்லா கலர் கோலமாவையும் வாங்குவோம், ஒவ்வொரு கலர் மாவாக பிரித்து வைத்து கொண்டு , அதை வெள்ளை கோலமாவில் சேர்த்து கலர் கோலமாவு தயாரிப்போம், ( நான் இந்த வேலைகளை இவ்வளவு முனைப்புடன் செய்வதற்கும் காரணம் இருகின்றது , எப்போழுதும் படி ,படி என்று அடித்து கொண்டிருக்கும் என் அப்பா ,இபொழுது மட்டும் கண்டுகொள்ளவே மாட்டார் ).

எனக்கு தெரிந்து ,எங்கள் ஊரின் மார்கழி மாத கோலத்தில் ,என் அக்காவின் கோலத்தை மிஞ்சியது வேறு யாருமே இல்லை , இதற்க்கு முக்கிய காரணம் என் அக்காவுக்கு ஓவியம் வரைய தெரியும் என்பதே!உண்மையில் விடியற்காலையில் மற்றவர்கள் எங்கள் வீட்டை தாண்டி செல்லும்பொழுது கோலத்தை பார்த்துக்கொண்டு புகழ்ந்துவிட்டு செல்வார்கள் !!

என் பணியில் மிகவும் முக்கியமானது , ஒற்றன் பணியே , ஒவ்வொரு வீடாக விடியற்காலையில் பார்த்துவிட்டு வந்து , என் அக்காவிடம் உளவு சொல்லுவேன் ,இத்த கோலம் இப்படி ,அந்த கோலம் அப்படி என்று , ஆனால் , கோலம்போட தாயார் ஆவதற்கு ,முந்தய இரவுளே ,அந்த கோலத்திற்கு ஏற்ப கலர் கோலமாவை வைத்துகொள்ள வேண்டும். என் அக்கா select -செய்யும் கோலங்கள் அனைத்தும் நிறைய கலர் உள்ளதாகவே இருக்கும்.

விடியற்காலையில் கோயிலில் சாமி பாடல்களை போட்டவுடனே , சீக்கிரமாக எழுந்து வீட்டு வாசலில் ,துடைபத்தால் நன்றாக கூட்டி பெருக்க வேண்டும் , பின்பு மாட்டு சாணம் கலந்த தண்ணிரை நன்றாக அதன்மேல் தெளித்து ,பின்பும் ஒருமுறை கூட்ட வேண்டும் ,இபொழுது நன்றாக தரை கோலம்போட எதுவாக இருக்கும்!

என் அக்க முதலில் , மெல்லில்ய கோடாக கோலத்தை போட்டு கொண்டு ,அந்த ,அந்த ,இடத்தில் கலர் கோலமாவை போடுவோம் ,நானும் சற்று நேரம்விட்டு எழுந்துவந்து கோலத்தில் கலந்து கொள்வேன் , என் அப்பா ஒரு பீடியை பற்றவைத்து கொண்டு ,வீட்டு திண்ணையில் அமர்ந்து எங்களை பார்த்து கொண்டு ஏதாவது எங்களுக்கு சொல்லிக்கொண்டே இருப்பார் .என் அப்பாவும் ஆர்வமாக கோலத்தை பார்பார் ,ஒருவேளை பெண் குழந்தை பிடிக்கும் என்பதால் இருக்குமோ !!

கோலம் முடியும் தருவாயில் விடியற்காலை மெல்லிதாக கரைந்து கொண்டே இருக்கும்,அந்த நேரங்கள்  கோழிகள்  கூவும் ஓசைகள் கேட்க்கும் , பறைவைகள் மெல்லிய சத்தங்கள் எழுப்பி கொண்டு ஒரு திசையில்லிருந்து ,மறு திசைக்கு பறந்து கொண்டிருக்கும், அவர் ,அவர் ,வீட்டு வாசல்களில் பேச்சு குரல்கள் கேட்டு கொண்டிருக்கும் , தெருக்களில் நடக்க ஆரம்பிப்பார்கள் , ஆடு , மாடுகளை கூட்டி கொண்டு வயல்வெளிக்கு செல்வார்கள் .

இந்த கோலத்தில் ,என் உருப்படியான பணி , மாட்டு சாணத்தை கையில் எடுத்து அதில் அழகாக மூன்று சிறு பிள்ளையார் செய்து அதை கோலத்தின் நடுவில் வைப்பேன் ,பின்பு அதில் சிறு குங்குமம் வைத்துவிட்டு ,அறுகம் புல் எடுத்து அதன் நடுவினில் வைப்பேன் ,எங்கள் வீட்டு கொள்ளையில் பரங்கிக்காய் கொடியினில் தேடி , பரங்கி பூவை எடுத்து பிள்ளையார் நடுவினில் வைத்துவிட்டு ,

அந்த மார்கழி விடியற்காலையில் முழுவதும் முடிந்த எங்கள் வீட்டு கோலத்தை பார்க்கும்பொழுது கிடைக்கும் ஒரு ஆனந்த சுகம் !! அப்படியே தெரு முழுவதும் ஒரு ஓட்டம் ஓடிபோய் ,எல்லோருடைய கோலத்தைவிட நம்ம வீட்டு கோலம்தான் அழகு , இதை தோற்கடிக்க எங்கும் கோலம் இல்லை என்ற கர்வத்தில் பரவசமாய் மார்கழி பனியில் என் பால்யத்தின் பாத சுவடுகள் பால் பொங்கும் மகிழ்ச்சியாய் வீட்டினுள் செல்லும் .

.........................அன்புடன் அருள்




1 comment:

  1. இதை படித்த ஒவ்ெவாறு நிமிடமும் என் கடந்த கால நினைவுகளை நியாபகம் படுத்தியது... நன்றி...

    ReplyDelete